Sunday, December 11, 2011

7 ஆம் அறிவு-திரை விமர்சனம்

ரெட் ஜயண்ட் மூவிஸ் சார்பாக உதயநிதி ஸ்டாலின் தயாரித்து வழங்கும் படம் "7 ஆம் அறிவு". ஏ.ஆர். முருகதாஸ் இதை இயக்கியுள்ளார்.

"ஏழாம் அறிவு" படத்தில் கதாநாயகனாக சூர்யாவும், கதாநாயகியாக உலக நாயகன் கமலஹாசனின் மகளான ஸ்ருதி ஹாசனும் நடிக்கிறார்கள். இன்னொரு நாயகியாக ‘நாடோடிகள்’ படத்தில் நடித்த அபிநயா நடித்துள்ளார்.

"7 ஆம் அறிவு" ஒரு மருத்துவ-வரலாற்று-விஞ்ஞான படம். சூரியவின் வாழ்வில் இது ஒரு மிக முக்கியமான படமாக இருக்கும். புத்த பிட்சு-வான போதிதர்மன் என்ற பாத்திரத்திலும், அரவிந்த் என்ற சர்க்கஸ் கலைஞர் என இரண்டு வேடத்தில் நடித்துள்ளார் சூர்யா. தமிழ் சினிமாவில் முதன் முதலாக அறிமுகமாகும் ஸ்ருதிஹாசன், சுபா ஸ்ரீநிவாசன் என்ற விஞ்ஞானி வேடத்தில் நடித்துள்ளார். "கஜினி" படத்தில் வித்தியாசமான வில்லனை அறிமுகப்படுத்தினார் ஏ.ஆர். முருகதாஸ். அதேபோல், இப்படத்திலும் வியட்நாமிலிருந்து ஜானி ட்ரை நியுயன் (Johnny Tri Nguyen) என்ற வில்லனை இறக்குமதி செய்திருக்கிறார். இவர் கராத்தே, குங்பூ உள்ளிட்ட பலவிதமான தற்காப்புக் கலைகளை கற்றிருக்கிறார். "கிராடில் 2 தி கிரேவ்" (Cradle 2 the Grave) என்ற ஹாலிவுட் படத்தில் பல வியக்கவைக்கும் ஸ்டண்ட் காட்சிகளில் நடித்துள்ளார். "ஸ்பைடர் மேன் – 2 " படத்தில் ஸ்பைடர்மேனுக்கு டூப் போட்டு நடித்தவர் என பல சிறப்புகளை உடையவர் ஜானி. இப்படத்தில் இடம் பெற்றுள்ள சண்டைக் காட்சிகள் ஹாலிவுட் தரத்திற்கு இருக்கிறது.

"7 ஆம் அறிவு" படத்தின் கிளைமேக்ஸ் சண்டை காட்சிகளில், வில்லன் நடிகர் ஜானி டிரை நுயென்னுடன் மோதுகிறார் சூர்யா. இந்த சண்டைக் காட்சியை குங்பூ தற்காப்பு கலையை மையமாக்கி எடுத்திருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ். இதற்காக சூர்யா சிறப்பு பயிற்சிகளை மேற்கொண்டார். இப்படத்தின் சண்டைப் பயிற்சி பொறுப்பினை மேற்கொண்டார் பீட்டர் ஹைன்.

"7 ஆம் அறிவு" படத்தின் கதை 5-ஆம் நூற்றாண்டில், பல்லவ சாம்ராஜ்யத்தில் வாழ்ந்த போதிதர்மன் என்ற புத்த பிட்ஷுவின் வாழ்க்கையை காண்பிக்கும் விதத்தில் துவங்குகிறது. இவர் தற்காப்பு கலைகளிலும், மருத்துவத்திலும் நிபுணத்துவம் கொண்டவர். இவர் தனது பெற்றோர்கள் ஆணையை ஏற்று சீனா செல்கிறார். அங்கு சிறிது காலம் வசிக்கிறார். அப்பொழுது, அங்குள்ளவர்களை, ஒரு விதமான நோய் வந்து தாக்குகிறது. அப்போது, அவர் தனது மருத்துவத்தின் மூலம் அங்குள்ளவர்களை காப்பாற்றுகிறார். இதனால், அங்கிருந்த மக்களுக்கு அவர் மீது உள்ள மரியாதை கூடுகிறது. அவரை வணங்க துவங்குகின்றனர்.


பின்னர் ஒரு சமயம், அருகிலுள்ள பகுதியிலிருந்து எதிரிகள் வந்து, இவர் வாழ்ந்த பகுதியிலிருந்த மக்களை தாக்குகின்றனர். அவர் தனது கலைகளை பயன்படுத்தி இவர்களை காக்கின்றார். அந்த பகுதி மக்கள் அவரிடம் அந்த தற்காப்பு கலைகளை கற்று தரும்படி கேட்கின்றனர். எனவே, அக்கலை-களை அவர்களுக்கு கற்றுக் கொடுகின்றார். பின்பு, அங்குள்ளவர்களுக்கு கடவுள் போலவே மாறிவிடுகின்றார்.

அங்கிருந்து திரும்ப வரும் முயற்சிக்கும் போது, அவரை திரும்ப அனுப்ப அங்குள்ளவர்கள் விரும்பவில்லை. அவர் அங்கேயே இறந்து, அவரை அங்கேயே, புதைத்தால் அவரிடம் இருக்கும் சக்தி அந்த மண்ணிலேயே தங்கிவிடும் என்று சுயநலம் கொண்டு அவருக்கு விஷம் கொடுக்கின்றனர். அவர்களின் எண்ணங்களை உணர்ந்துக் கொண்ட அவர், அவ்விஷத்தை அருந்தி இறந்து விடுகின்றார்.

இதே நேரத்தில், சர்கஸில் பணிபுரியும் சூர்யாவையும் (அரவிந்த்) காண்பிக்கின்றனர். சுபா எனப்படும் விஞ்ஞானியாக வரும் ஸ்ருதி, 1600 ஆண்டுகளுக்கு முன்பு போதிதர்மன் (D.N.A) உடலின் மூலப்பொருள்கள், இப்போது உள்ளவர்களிடமும் இருக்கும் என்பதை கண்டுப்பிடிகின்றார். அது இப்போது அரவிந்தின் உடலில் இருக்கிறது என்று கண்டறிகிறார். இதனால் அவரை சந்திக்கின்றார். இதற்கிடையில், இவர்களுக்குள் காதல் மலருகிறது. சுபா வெறும் காதலுக்காக மட்டும் தன்னுடன் பழகவில்லை என்பதை கண்டுபிடித்து விடுகின்றார் அரவிந்த். இதனால், அனைத்து உண்மைகளையும் கூறுகிறார் சுபா. அதை கேட்ட அரவிந்த், தன்னால் இயன்ற அளவுக்கு சுபாவின் ஆராயய்ச்சிக்கு ஒத்துழைக்கிறார்.

இதற்கிடையில் ஆபரேஷன் ரெட் எனப்படும் ஒரு உளவுப் பணியை மேற்கொள்ள வருகிறார் டோங்க்லீ (ஜானி) என்ற வில்லன். ஆபரேஷன் ரெட் யாதெனில் 1600 வருடங்கள் முன்பு சீனாவை தாக்கிய அதே கிருமியை, இப்போது இந்தியாவில் பரவச்செய்ய வேண்டும் என்பது தான். அவ்வாறு பரவ செய்து, அதற்குண்டான மருந்தினை சீனாவிலிருந்து மட்டும், இந்தியாவை வாங்கவைக்க வேண்டும் என்பதே முக்கிய குறிக்கோள். இதனால் இந்தியாவை, மருத்துவ ரீதியாக சீனாவை சார்ந்திருக்க செய்ய வேண்டும், என்பதே இந்த ஆபரேஷன் ரெட்டின் மிக பிரதான திட்டமாகும்.

(*) இந்த ஆரரேஷன் ரெட்டில், யார்-யார், யாரிடம் வெற்றிக் கொள்கின்றனர்?

(*) போதிதர்மனின் மூலபொருட்களை மீண்டும் அரவிந்தின் உடலில் செலுத்தி, அதனால் இந்திய நாட்டிற்கு நன்மைகள் பெற்றுக் கொள்ள முடிகிறதா? இல்லையா?

(*) சீனாவிலிருந்து வரும் வில்லன் வெற்றி காண்கிறாரா? அல்லது சுபா மற்றும் அரவிந்த் அவர்களின் ஆராய்ச்சிகளில் ஜெய்க்கிரார்களா என்பதை மிக சுவாரஸ்யமாக க்ளைமாக்சில் காண்பித்துள்ளனர்.

இக்கேள்விகளின் விடையைத் தெரிந்துக் கொள்ள "7 ஆம் அறிவு" படத்தை காணுங்கள்.

"எந்திரன்" படத்திற்கு கிராபிக்ஸ் காட்சிகளை வடிவமைத்த அதே நிறுவனத்தில் தான், இப்படத்தின் கிராபிக்ஸ் காட்சிகளையும் வடிவமைத்திருக்கிறார் இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ். இதன் கிராபிக்ஸ் காட்சிகள் "எந்திரன்" படத்திற்கு நிகராக உள்ளது.


இதில் இடம் பெற்றுள்ள ஒரு பாடலுக்கு மட்டும் 1000 நடனக் கலைஞர்கள் ஆடியிருக்கிறார்கள். இதுபோல் பல பிரம்மாண்டங்களை கொண்டுள்ளது இந்த படம்.


இதன் ஒளிப்பதிவை மிகவும் திறன்பட மேற்கொண்டுள்ளார் ரவி கே. சந்திரன். ஆண்டனி படத்தொகுப்பு வேலையை தெளிவாக செய்துள்ளார். "7 ஆம் அறிவு" படத்தின் இசையை அமைத்துள்ளார் ஹாரிஸ் ஜெயராஜ். இதற்காக, பழங்கால இசைக் கருவிகளை பற்றி நாடுகள் சென்று ஆராய்ச்சி செய்து, பின்பு இசையமைத்தினர்.

இத்தனை காலம் நாம் தெரிந்துக்கொள்ள தவறிய போதிதர்மன் வாழ்கையை பற்றி அறிந்துக்கொள்ளும் விதாமாக, இப்படத்தை வழங்கிய ஏ.ஆர். முருகதாஸ் அவர்களுக்கு நன்றி கூறியே ஆக வேண்டும். இப்படத்தின் கலை, இசை, சண்டைக் காட்சிகள், பாடல்கள் உள்ளிட்ட அனைத்து அம்சங்களும் சூப்பர். மொத்தத்தில், இது அனைத்து தமிழ் மக்களும், அனைத்து இந்தியனும் பார்த்து பரவசம் அடைய வேண்டிய ஒரு அருமையான படம். இந்திய சினிமாவை உலக அரங்கில் கொண்டு செல்லும் படங்களில், இந்த "7 ஆம் அறிவு" படத்திற்கும் முக்கிய பங்கு நிச்சயம் உண்டு.

0 comments:

Post a Comment

Pages 101234 »